சென்னை ஓட்டேரி மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் மே 29ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் காலை 5 மணியளவில், காரில் வந்த இரண்டு பேர், அந்த இளம்பெண்ணை வீட்டு வாசலில் இருந்து கடத்திச் சென்றனர். இது அவருடைய குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, இளம்பெண்ணின் அண்ணன் ஓட்டேரி போலீசில் புகார் அளித்தார். ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டபோது, கார் பதிவு எண்ணின் அடிப்படையில், டிரைவராக இருந்த அர்பத் ரஹீம் (21) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், இளம்பெண்ணை அவரது காதலன் நைனா முகமது (22) என்பவர் கடத்தி சென்றதாகவும், கிளாம்பாக்கம் வரை காரில் சென்று, அங்கிருந்து மதுரைக்கு பேருந்தில் அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, ஓட்டேரி போலீசார் மதுரை மேலூர் சோதனைச் சாவடியில் தடுப்புநிலையம் அமைத்து, மதுரை போலீசாரின் உதவியுடன், காதலன் நைனா முகமது மற்றும் இளம்பெண்ணை மீட்டு, மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர், அர்பத் ரஹீம், நைனா முகமது ஆகியோரை ஓட்டேரி காவல் நிலையம் அழைத்து வந்து, விசாரணை மேற்கொண்டு, கடத்தல் வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இளம்பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.