மும்பை மாநகராட்சித் தேர்தல் பரப்புரையின் போது, “மும்பை மராத்தியர்களுக்கு மட்டும் சொந்தமான நகரம் அல்ல; அது ஒரு பன்னாட்டு நகரம்” என்று அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, “மும்பைக்கு வந்தால் அண்ணாமலையின் கால்களை வெட்டுவேன்” என்று மிரட்டல் விடுத்திருந்தார். இதனை வன்மையாகக் கண்டித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மும்பை குறித்த அண்ணாமலையின் கருத்து அவரது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு; அதை ஏற்பதும் எதிர்ப்பதும் அவரவர் ஜனநாயக உரிமை. ஆனால், அதற்காக ஒரு தமிழரின் கால்களை வெட்டுவேன் என்று மிரட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அண்ணாமலை ஒரு தனிநபர் மட்டுமல்ல, அவர் தமிழ்த்தேசிய இனத்தின் மகன் என்றும், மராத்திய மண்ணைக் காக்கப் போராடும் மராத்தியர்கள், அதே உணர்வோடு தங்கள் இன மகனுக்காகத் தமிழர்களும் நிற்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சீமான் எச்சரித்துள்ளார்.
