அண்ணன் விஜயகாந்துடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை என்று குறிப்பிட்டு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (நிமோனியா) காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 06:10 மணிக்கு காலமானார்.

இதையடுத்து சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து விஜயகாந்த் உடல் வடபழனி வழியாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் வைக்கப்படுள்ளது. மேலும் சென்னையில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நாளை மாலை 04:45 மணிக்கு விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட விஜயகாந்த் அவர்களுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் டி. ராஜேந்திரன், நடிகர் கவுண்டமணி, கவிஞர் வைரமுத்து, மன்சூர் அலிகான், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், மாரி செல்வராஜ், அர்ஜுன், விஜயகுமார், விஜய் சேதுபதி, ஆனந்த் ராஜ், கருணாஸ், ஷாம், விமல், பவர் ஸ்டார், கூல் சுரேஷ், நடிகை அபிராமி, கோவை சரளா, குஷ்பூ, நமீதா, கவிதா, கவுதமி உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில், அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை… யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை.. கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!! என குறிப்பிட்டு வீடியோவில், அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு மனதிற்கு அவ்வளவு வருத்தமா இருக்கு. ஒரு கண்ணுல துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்த அபூர்வ  கலைஞன் அவர்கள்.. கடைக்கோடி மக்கள் வரைக்கும் எல்லோருக்கும் எல்லா உதவிகளும் செஞ்சு.. புரட்சி கலைஞனா, கேப்டனா நம்ம எல்லாரும் மனசுலயும் இடம் பிடிச்சவங்க. அண்ணன் விஜயகாந்த் அவர்களோட ஆத்மா சாந்தி அடையனும்னு இறைவனை வேண்டுகிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கும், இலட்சக்கணக்கான ரசிகர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.