தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில், தற்போதைய விஜய் தலைமையிலான ஆட்சி கவிழும் என அதிமுக-வின் மூத்த தலைவர் தனபால் அதிரடியாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த அதிரடித் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் 80 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாகக் குறிப்பிட்ட அவர், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி இல்லாததால், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்த அதிமுக-வைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்களும் விரைவில் தகுதிநீக்கம் செய்யப்படுவது 100% உறுதி என்றார்.
மேலும், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகளால் அவர்களுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணிக் கட்சிகளுமே கடும் அதிருப்தியில் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தகுதிநீக்க நடவடிக்கை மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி காரணமாக தற்போதைய விஜய் அரசு கவிழ்வது நிச்சயம் என தனபால் பேசியிருப்பது கோட்டை வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
