ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவின் சமரசத்தை ஏற்று ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை திரும்ப பெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் வசம் அதிகப்படியான எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் இருப்பதால் அவருக்கு தான் அதிமுக சின்னம் சொந்தமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த முருகானந்தம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவருடைய அணியில் இணைந்துள்ளனர்.

அதாவது ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ் செந்தில் முருகனை வேட்பாளராக நியமித்த நிலையில் அவர் அதிமுகவின் அடிப்படைத் தொண்டர் கூட இல்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மாவட்ட செயலாளரான முருகானந்தத்திடம் ஓபிஎஸ் கலந்தாலோசனை செய்யாமல் வேட்பாளரையும் நியமித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த முருகானந்தம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இபிஎஸ் அணியில் இணைந்துள்ளனர். மேலும் ஏற்கனவே ஓபிஎஸ்-க்கு அடிக்குமேல் அடி விழுந்து வரும் நிலையில் தற்போது ஈரோடு கிழக்கில் அவருடைய ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்திருப்பதால் ஓபிஎஸ் தரப்பு மிகுந்த கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.