தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது முத்துவேல் கர்ணாநிதி ஸ்டாலின் அவர்களே உங்கள் பெயரை மட்டும் கம்பீரமாக சொன்னால் போதாது செயலிலும் அதனை காட்ட வேண்டும் என்று விஜய் கூறினார். அதன் பிறகு அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே தான் போட்டி என்று விஜய் கூறினார்.

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மட்டும் தான் போட்டி என்றும் விஜய் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக அப்படி பேசினார் என்றும் கூறினார்.

இதே போன்று அண்ணாமலையும் விஜயை  விளாசினார். இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தமிழக வெற்றிக் கழகத்திற்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி என்று விஜய் கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, 2 ஆண்டுகளாக கட்சி தொடங்கி விட்டு என்னை வந்து சந்திக்க வேண்டும் என்று கூறுகிற ஒரு சர்வாதிகாரி இன்றைக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

2026 தேர்தலில் திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே தான் போட்டியாம். அடப்பாவி நீ 2 வயசு குழந்தை. நாங்கள் பவள விழாவை தாண்டியுள்ள 80 ஆண்டு கால கட்சி. நீ ஸ்கிரீனில் வந்தால் விசில் அடிப்பாங்க. நான் இன்றைக்கு சொல்கிறேன் நாளை தேர்தல் வைத்தால் கூட தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் கண்டிப்பாக திமுக தான் வெற்றி பெறும் என்று கூறினார். மேலும் இதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது என்பதை நான் உறுதியோடு கூறுகிறேன் என்றார்.