இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போர்ப்பதற்ற சூழ்நிலையில், பஞ்சாப் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே வீசப்பட்டதாகக் கூறப்படும் வெடிக்காத ஏவுகணையை, சில இளைஞர்கள் வயல்வெளியில் கையாளும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது. அந்த வீடியோவில், இரண்டு பேர் அந்த ஏவுகணையை கையில் எடுத்தபடி, கேமிராவுக்கு போஸ் கொடுத்து சிரித்துக் கொண்டிருப்பதும், மற்றவர்கள் நகைச்சுவையுடன் பாடல்களைப் பாடி வீடியோ எடுப்பதும் காணப்படுகிறது.

இந்த அதிர்ச்சிகரமான வீடியோவை பத்திரிகையாளர் ககன்தீப் சிங் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “உயிரிழப்புக்கு வழிவகுக்கும், வெடிக்காத பொருட்களைத் தொட வேண்டாம்” என எச்சரிக்கைச் செய்துள்ளார். இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள், இவ்வகையான வெடிபொருட்கள் எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம் உள்ளதால், அவற்றை எந்த வகையிலும் தொட்டோ, நெருங்க கூடாது என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

 

போர் நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையில், எல்லை அருகே வெடிக்காத ஏவுகணைகள், குண்டுகள் போன்றவை உள்ளன என்பது கண்டிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமூக ஊடகங்களில் சிலர், இந்த வீடியோவில் உள்ள இளைஞர்களை “பஞ்சாபிகள் பஞ்சாபிகள்!” என கேலி செய்ததுடன், “துப்பாக்கிகளோடு விளையாட வேண்டாம், இது நகைச்சுவைக்கு உரிய விஷயம் அல்ல” என கடுமையாக கண்டித்துள்ளனர்.

இத்தகைய வீடியோக்கள் பாதுகாப்புக்கே நேரடி ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதுடன், உடனடி தகவல்களை பாதுகாப்பு அமைப்புகளுக்கு தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.