திருவொற்றியூர் மணலி காமராஜர் தெருவை சேர்ந்த பொம்மி(60). இவருக்கு  திருமணமாகாததால் உறவினர்களுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் உறவினர்கள் திருப்பதி கோவிலுக்கு சென்றதால் பொம்மி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் பொம்மி வீட்டை சுத்தம் செய்யும் மாப் ஸ்டிக் ஈரமாக இருந்ததால் அதை மொட்டை மாடியில் காய வைத்து சிறிது நேரம் கழித்து எடுக்க சென்றார்.

அப்போது இரண்டு வீடுகளுக்கு இடையே உள்ள அரை அடி சந்தில் மாப் ஸ்டிக் தவறி விழுந்ததை பொம்மி பார்த்தார். அதை எடுக்க பல வழிகளில் முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால் சந்து உள்ளே சென்று மாப் ஸ்டிக்கை எடுத்தார். ஆனால் பொம்மியால் திரும்பி வெளியே வர முடியவில்லை. அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பொம்மியை மீட்க முயற்சி செய்தனர். அவர்களாலும் முடியவில்லை.

இதுகுறித்து அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு பொம்மியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மீட்கும்போது அவரது முதுகு, முகம் உள்ளிட்ட இடங்களில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது பொம்மி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.