கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே மூலமாக பயணிகளின் குறைகளுக்கு தீர்வு காணும் விதமாக ரயில் மதாத் எனும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக தொலைபேசி, எஸ்.எம்.எஸ், சமூக ஊடகம் போன்றவற்றிலிருந்து பெறப்படும் குறைகளை ஒருமுகப்படுத்தி குறித்த நேரத்தில் அவை அனைத்தும் தீர்க்கப்படுகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வேயில் கட்டணமில்லா உதவி எண் 139 மூலம் 61%, சமூக ஊடகம் மூலம் 10%, ரயில் மதாத் கைபேசி செயலி மூலம் 5%, ரயில் மதாத் இணையதளம் மூலம் 21%, மின்னஞ்சல் குறுஞ்செய்தி மூலமாக 3 % குறைகள் பெறப்பட்டு தீர்வு காணப்படுகிறது.

கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் ரயில் மதாத் மூலமாக 37 நிமிஷங்களில் பயணிகளின் குறைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. குறைகளை பதிவு செய்த முதல் கவனிப்பு நேரமான எட்டு நிமிஷங்களில் பயணிகளை தொடர்ந்து கொண்டு குறைகள் தீர்க்கப்படுகிறது. அந்த வகையில் நிகழ் நிதியாண்டில் 75,613 பயணிகள் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 2021 – 2022-ம் நிதி ஆண்டில் 31,450 குறைகள் மட்டுமே பதிவு பெற்று  தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்