
அமெரிக்கா செல்கின்ற விமானத்தில் உள்ள பயணியின் செல்போனில் “RIP” என வந்திருந்த மெசேஜ் ஒரு பெண்ணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி, விமானம் அவசரமாக தரையிறங்கிய பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான போர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுயானிலிருந்து, அமெரிக்காவின் டல்லாஸ் நகரை நோக்கி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 193 பேர் பயணம் செய்தனர்.
பயணத்தின்போது, இரு பெண்கள் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்போது, ஒரு பெண்ணின் செல்போனை மற்றொரு பெண் எட்டிப் பார்த்தபோது, அதில் “RIP” (Rest In Peace) என வரும் மெசேஜ் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதை வெடிகுண்டு மிரட்டலாக தவறாக புரிந்துகொண்ட அந்த பெண், உடனடியாக விமான பணிப்பெண்ணிடம் புகார் செய்துள்ளார்.
இதை அடுத்து, விமான பணிப்பெண், கேப்டனிடம் தகவலை தெரிவித்தார். பரபரப்பான சூழலில், விமானம் இஸ்லா வெர்டே விமான நிலையத்திற்கு திருப்பி, அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தின் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். பாதுகாப்புத்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டபோது, “RIP” மெசேஜ் வெறும் சாதாரணமாக அனுப்பப்பட்டதெனவும், இதில் எந்தவிதமான மிரட்டலும் இல்லையெனவும் உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதோடு, தவறான புகாரை எழுப்பிய பெண்ணின் செயலை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “பொய்யான தகவலால் 193 பயணிகள் உயிர் அச்சத்தில் இருந்தனர். அந்த பெண்ணின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஒரு பயணி பதிலடி கூறியுள்ளார்.