
பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டம் பீரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தும்மா கிராமத்தில், ஒரு மைனர் மாணவி லெஹங்கா வாங்கி தரவில்லை என்பதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 16 வயதான ஆர்த்தி குமாரி என்ற மாணவி, தனது சகோதரியின் திருமண விழாவில் புது லெஹங்கா அணிய ஆவலுடன் இருந்தார். ஆனால், அவரது குடும்பத்தினர் அதை மறுத்துவிட்டதால் மனமுடைந்த அவர் விஷம் குடித்ததாக தெரிகிறது.
திங்கட்கிழமை, வீட்டில் இருந்தபோது கோதுமையில் பூச்சி கொல்ல பயன்படுத்தப்படும் சல்பாஸ் மாத்திரையை அவர் உட்கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக சஹர்சா நகரில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுமி உயிர் பிழைக்கவில்லை. அதே நாளில் இரவு 8.30 மணிக்கு அவர் இறந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதலில், மன அழுத்தமே தற்கொலைக்கான காரணம் என்று கூறிய குடும்பத்தினர், பின்னர் உண்மை வெளிவந்ததும் மௌனமாயினர். ஆர்த்தி பயின்று வந்த பயிற்சி மையத்தின் மாணவர்கள், “அவள் மிகவும் ஆவலுடன் லெஹங்கா அணிய ஆசைப்பட்டார், ஆனால் அவரை திட்டியதும், அதை வாங்க மறுத்ததும் அவளுக்கு மனவேதனை ஏற்படுத்தியது” என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.