
சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு ஒரு விமானம் செல்ல இருந்தது. இதில் செல்ல இருந்த பயணிகளின் உரிமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன் பிறகு அவர்கள் குடியுரிமை சோதனைக்கு சென்றனர். இந்நிலையில் அபுதாபிக்கு செல்வதற்காக பெத்தெனன் இளங்கோ (42) என்ற பயணி அங்கு வந்திருந்தார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இவர் தன்னுடைய தந்தையுடன் சென்றிருந்த நிலையில் திடீரென தன்னுடைய ஆடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக ஓடினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவரை பிடித்து கட்டாயப்படுத்தி ஆடைகளை போட வைத்தனர். அப்போது அவருடைய தந்தை தன் மகனுக்கு மனநலம் சரியில்லாததால் இப்படி செய்துவிட்டதாக கூறினார். இதைத்தொடர்ந்து அவர்களை விமானத்தில் பயணம் செய்ய அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. மேலும் அவர்கள் மதுரையில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் இருந்து வந்தது தெரிய வந்த நிலையில் அவர்களை கார் மூலமாக மீண்டும் மதுரைக்கே அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.