பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி இரவு நேரத்தில் பெண் ஒருவர் தனது கணவரை சந்திப்பதற்காக ரேபிடோ பைக் டாக்ஸியை முன்பதிவு செய்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் ஒரு ஹோட்டலில் பணிபுரிவதால் இரவு உணவை ஹோட்டலில் சாப்பிடுவதற்காக தனது மனைவியை அழைத்துள்ளார்.

அதன்படி ரேபிடோ பைக் டிரைவர் வந்தவுடன் அந்த பெண் வீட்டை பூட்டிவிட்டு அவருடன் தனது கணவரை சந்திக்க பைக்கில் சென்றார். அப்போது திடீரென டிரைவர் மாற்று பாதையில் சென்றதால் அதை பார்த்த அந்த பெண் அவரிடம் எதற்காக மாற்றுப்பாதையில் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர் சாலையில் தண்ணீர் தேங்கி கிடந்ததால் தான் மாற்று பாதையில் சென்றதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் தனது தோழியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போது டிரைவர் அவரிடம் நீங்கள் பெங்காலியா என்று கேட்டதுடன் அந்த பெண்ணிடம் அவர் பெங்காலி மொழியில் பேச தொடங்கினார்.

அதன்பின் அந்த பெண்ணை அவர் தனிமையான இடத்திற்கு கூட்டி சென்று அவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் தப்பிக்க முயன்றபோது அவரை துரத்தி சென்று பிடித்து அவரது போன் மற்றும் ரூ. 800 பணத்தை பறித்துள்ளார். அதன்பின் அந்த பெண் அவரிடம் தன்னை விட்டு விடுமாறு கெஞ்சுள்ளார்.

இதனால் அவர் அந்த பெண்ணை ஆர்எம்செட் எக்கோ வேர்ல்டுக்கு அழைத்து சென்று அவரை அங்கு விட்டுவிட்டு அவரது செல்போனை மீண்டும் அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த பெண் இச்சம்பவத்தை பற்றி காவல்துறையினரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரேபிடோ நிறுவனத்திடம் அந்த நபரின் செல்போன் என்னை வைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் பெங்களூரை சேர்ந்த பிஸ்வாஜித் என்பது தெரியவந்தது. அதன்பின் அந்த நிறுவனம் பிஸ்வாஜித்தை புகாரின் அடிப்படையில் பணிநீக்கம் செய்தனர். மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்ததுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.