ஐபிஎல் 2025 தொடரின் பரபரப்பான கட்டத்தில் சவாய் மான்சிங் மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில், மும்பையின் ஸ்டார்பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தனது அட்டகாசமான பேட்டிங் மட்டுமின்றி, ஒரு வினோத சம்பவத்தாலும் ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறினார். இந்த ஆட்டத்தில் அவர் அரைசதம் அடித்து மும்பை இந்தியன்ஸின் ஸ்கோரைப் பெரிதும் உயர்த்தினார்.

ஆனால், 9-வது ஓவரின் போது ஒரு அபூர்வமான சம்பவம் நடந்தது. அதாவது கர்ண் சர்மா துருவ் ஜூரெலுக்கு பந்து வீசிய போது, அவர் அடித்த பந்து நேராக எக்ஸ்ட்ரா கவர் ஓவரை தாண்டி பிளாட் சிக்ஸராக பறந்தது. இந்த சிக்ஸருக்குப் பிறகு பந்து மைதானத்தில் இருந்து காணாமல் போனது. புகைப்படக் கலைஞர்கள் அமைந்திருந்த பகுதியில் பந்து சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆட்டத்தில் சில நிமிடங்கள் இடைவெளி ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மூவரும் பந்தைத் தேடி ஓடி சென்றனர். இதில் சூர்யகுமார் யாதவ் மிகவும் தீவிரமாக பந்தைத் தேடினார்.

 

அந்த நேரத்தில், பந்து வீச்சாளர் மற்றும் அம்பையர்கள் மற்றொரு பந்தைத் தேர்ந்தெடுத்து, பந்துவீச்சை தொடர தயாராக இருந்தனர். ஆனால் இதை அறியாத சூர்யகுமார் யாதவ், பந்தைத் தேடும் வேலையில் மூழ்கியிருந்தார். ரசிகர்கள் இந்த சம்பவத்தை காமெடியாய் பார்த்து சமூக ஊடகங்களில் மீம்களாக பரப்பி வருகின்றனர். பந்தை இழந்த இந்த சம்பவம், ரசிகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்தது. கிரிக்கெட் விளையாட்டில் இது போன்ற அபூர்வ தருணங்கள் ஆட்டத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.