ராணுவத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக “அக்னிபாத்” எனும் திட்டத்தை மத்திய அரசானது அறிவித்து உள்ளது. இதில் தேர்வுசெய்யப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் வீரர்கள், முதலில் உடற்தகுதி தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். இதையடுத்து மருத்துவ தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். கடைசியாக பொது நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் சில சிக்கல்கள் எழுந்ததன் காரணமாக அண்மையில் மாற்றம் செய்யப்பட்டது.

அந்த வகையில் ராணுவம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் முதலாவதாக ஆன்லைன் மூலம் பொது நுழைவுத்தேர்வில் பங்கேற்க வேண்டும். அதனை தொடர்ந்து உடற்தகுதி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய ராணுவத்தின் ஆட்கள் தேர்வுத் துறைக்கான அதிகாரி கூறியிருப்பதாவது “ராணுவத்தில் சேருவதற்கு விருப்புபவர்கள் முதலாவதாக ஆன்லைன் மூலம் பொது நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோன்று தேர்வுக்கான பாடத் திட்டத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கூறினார்.