
சென்னை மாவட்டம் அயப்பாக்கம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மறந்துவிடப்பட்ட ₹25 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளைக் கண்டு, அதனை நேர்மையாக ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகிறது.
அவருடைய நேர்மைக்காக பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மட்டுமன்றி, நகையை இழந்த குடும்பத்தினரால் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டதோடு, காவல்துறை அதிகாரிகளால் ஊக்கத்தொகையும் அளிக்கப்பட்டது.
சென்னை தாம்பரம் மடப்பாக்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் – மீனாட்சி தம்பதியினர் கடந்த மாதம் 27ஆம் தேதி அயப்பாக்கத்தில் நடந்த தங்களது உறவினர் திருமணத்தில் கலந்து கொண்டு திருமண மண்டபத்தில் தங்கியிருந்தனர்.
திருமண முடிந்து வீடு திரும்பிய பிறகு, தாங்கள் கொண்டு வந்த நகை பெட்டியைக் காணவில்லை என்பதையும், அதில் பெருமளவு தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், திருமண மண்டபத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஜெயமணி என்ற பணிப்பெண், மணமகன் அறையில் கட்டிலடியில் ஒரு கனமான பெட்டி கிடைத்ததை கவனித்து, அதனை மண்டப மேலாளரிடம் ஒப்படைத்தார்.
மேலாளர் துரிதமாக திருமலாவயல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஜெயமணி பெட்டியை நேர்மையாக கொடுத்து உள்ள காட்சிகள் பதிவாக இருந்தன.
பின்னர், காவல்துறை அதிகாரிகள் நகையை இழந்தவர்களை அடையாளம் கண்டுபிடித்து, துணை ஆணையர் அலுவலகத்தில் அழைத்து வந்து நகைகளை பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
இது குறித்து ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமா அவர்கள், நேர்மையான பணியாளரான ஜெயமணியை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். மேலும், அவர் உண்மையான ஈமான் கொண்டவர் என்பதை அங்கீகரித்து ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வை அறிந்த நகை இழந்த குடும்பத்தினர், உணர்ச்சி பொங்கி, ஜெயமணியின் நேர்மைக்கு பாராட்டாக 4 கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்கினர். ஒரு சமூகத்தில் நேர்மை இன்னும் உயிரோடு உள்ளது என்பதை நிரூபிக்கும் இந்த நிகழ்வு, சமூக வலைதளங்களில் பாராட்டுகளுடன் பகிரப்பட்டு வருகிறது.