நியூயார்க் நகரின் லா குவார்டியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த Southwest Airlines விமானத்தில் மதுபோதையில் சண்டை போட்ட பெண் ஒருவர், விமானம் புறப்படும் நேரத்தில் விமானத்தையே குழப்பமடையச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதாவது 32 வயதான லீனா பேரி என்ற பெண், விமானத்தில் ஏறிய பிறகு அருகில் இருந்த ஒரு பெண் பயணியின் தலைமுடியை இழுத்து தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகள் சமாதானப்படுத்த முயன்ற போதும், அவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தன்னை கட்டுப்படுத்த முயன்ற ஒரு கருப்பர் பயணியைக் கண்டித்தும், இனவெறி வார்த்தைகள் கூறியும் பரபரப்பை அதிகரித்தார். “என் காதலனே கருப்பர், அதனால் எனக்கு பிரச்சனை இல்ல” என்று உருக்கமாக கூறியிருந்தாலும், அதற்குமுன் கூறிய அவமதிப்பு வார்த்தைகள் விமான பயணிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் X  தளத்தில் வைரலாகி வருகிறது. பயணிகள் சிலர் புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளனர். @CollinRugg என்ற பயனர் பதிவிட்ட வீடியோவில், அந்தப் பெண் கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு, ஒரு பெண்ணின் தலைமுடியை இழுக்கும் காட்சி தெளிவாக காணப்படுகிறது. இதனையடுத்து விமானப் பணியாளர்கள் மற்றும் சில பயணிகள் இணைந்து அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.

போர்ட் ஆத்தாரிட்டி போலீசார் கூறியதாவது, இந்த சம்பவத்திற்கு பிறகு லீனா பேரி கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நியூயார்க் நகரக் காவல்துறைக்கு ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது ‘aggravated assault’ (தீவிரமான தாக்குதல்) குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் நடந்த இந்த செயல்கள், பயணிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.