தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராயபோலு கிராமத்தில் நாகமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இதில் நாகமணியின் பெற்றோர் இறந்துவிட்டனர். இதன் காரணமாக அவர் தன் தம்பியான பரமேசுடன் இருந்தார். இதில் நாகமணிக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் கணவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பிரிந்தார். அதன் பிறகு தன் ஊரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற வாலிபரை காதலித்து வந்தார். ஆனால் இதில் ஸ்ரீகாந்த் வேறு ஜாதியை சேர்ந்தவர். இதன் காரணமாக தன் அக்காவின் காதலுக்கு பரமேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் எதிர்ப்பையும் ஏறி நாகமணி தன் காதலனை திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் 1-ம் தேதி நாகமணி தன் காதலனை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் ஹைதராபாத்தில் ஒன்றாக வசித்து வந்தனர்.

இதற்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தன்னுடைய சொந்த ஊருக்கு கணவருடன் சென்ற நாகமணி பின்னர் வேலைக்கு செல்வதற்காக பைக்கில் கிளம்பினார். தன் மாமியார் வீட்டில் இருந்து பைக்கில் சென்ற நாகமணியை அவருடைய தம்பி பரமேஷ் காரில் பின் தொடர்ந்தார். ‌ தன் அக்காவின் பைக் மீது காரை கொண்டு பரமேஸ் மோதியதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். பின்னர் காரில் இருந்து கீழே இறங்கி வந்த ‌அவர் கத்தியால் தன் அக்காவை குத்தி கொலை செய்தார். பின்னர் அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் சொந்த அக்காவையே தம்பி கழுத்தை அறுத்து கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாகமணி சடலத்தை மீட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.