பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களில் பிஸியான நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பிரியங்காவை விட 10 வயது சிறியவர் என்பதால் நடிகை பிரியங்கா சோப்ரா மீது பலர் விமர்சனங்களை வைத்தனர். இருப்பினும் அதையெல்லாம் பிரியங்கா கண்டுகொள்ளாமல் தன்னுடைய காதல் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் மல்டி மேரி என்ற பெண் குழந்தையை வாடகைத் தாய் முறையில் பிரியங்கா பெற்றெடுத்தார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் நடிகை பிரியங்கா தான் எதற்காக வாடகை தாய்முறையை தேர்ந்தெடுத்தேன் என்பது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, அந்த நேரத்தில் என்னை பற்றி மக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில் அதிலிருந்து வெளியே வந்து வாழ்க்கையை அமைக்க கடினமாக்கி கொண்டேன். ஆனால் அவர்கள் என் மகளைப் பற்றி பேசியது மிகவும் வேதனையாக இருந்தது. நான் அவளை அதிலிருந்து விலக்கிவிடு என்பது போன்ற மனநிலையில் தான் இருந்தேன்.
எனக்கு உண்மையில் மருத்துவ ரீதியாக சில பிரச்சனைகள் இருந்தது. அதனால்தான் எங்களுக்கு வாடகை தாய் முறை அவசியமாக இருந்தது. நான் இதை செய்யக்கூடிய நிலையில் இருந்ததற்காக எனக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். என்னுடைய மகள் பிரசவத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே பிறந்து விட்டார். அந்த சமயத்தில் நானும் என்னுடைய கணவரும் அறுவை சிகிச்சை அறையில் இருந்தோம்.
என்னுடைய மகள் என் உள்ளங்கை அளவைவிட சிறியதாக தான் இருந்தார். இதனால் என் மகளை இன்குபேட்டரில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால் நானும் என்னுடைய கணவரும் மூன்று மாதங்கள் மருத்துவமனைக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கும் அழைந்தோம் என்று உருக்கத்தோடு தெரிவித்துள்ளார். மேலும் நடிகை பிரியங்கா பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்றுக்கு தன்னுடைய மகளுடன் சேர்ந்து கொடுத்த புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.