வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சைனகுண்டா கிராமத்தில், வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டு இருந்த 6 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயகுமார் (35) -ஜான்சி தம்பதிக்கு லித்திகா என்ற மகள் இருந்துள்ளார். லித்திகா, அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று, வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த லித்திகா, திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார்.

உடனடியாக அலறிய சிறுமியின் சத்தத்தை கேட்டு வந்த குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே லித்திகா உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். இதுகுறித்து அறிந்த குடியாத்தம் காவல்துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.