தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் ஷோவை காண நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு தியேட்டருக்கு வந்தார். அப்போது அவரை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் வந்ததால் கூட்டம் அலைமோதியது. அப்போது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவருடைய மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த விவகாரத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அல்லு அர்ஜுன் 27 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்த நிலையில் பின்னர் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
ஆனால் ஜாமீன் ஆவணங்கள் சிறை அதிகாரிகளிடம் செல்லாததால் நேற்று ஒருநாள் இரவு முழுவதும் சிறையில் தான் அல்லு அர்ஜுன் இருந்தார். காலை அவர் வெளியே வந்துள்ளார். இதற்கிடையில் உயிரிழந்த ரேவதி என்ற பெண்ணின் கணவர் பாஸ்கர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். நான் உடனடியாக வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன். என்னுடைய மனைவி கூட்ட நெரிசலில் உயிரிழந்ததற்கும் அல்லு அர்ஜுனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று கூறினார். மேலும் நடிகர் அல்லு அர்ஜுன் தன்மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கு திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.