சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் விஜயா (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த 11ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அதன்பின் மூதாட்டி வீட்டிற்கு திரும்பவில்லை. இது தொடர்பாக அவருடைய மகள் லோகநாயகி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மூதாட்டியை தேடி வந்தனர். இதற்கிடையில் மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் பார்த்திபன் என்பவரை காவல்துறையினர் விசாரணைக்கு வருமாறு கடந்த 23ஆம் தேதி அழைத்துள்ளனர்.
ஆனால் அவர் தன் மனைவியுடன் திடீரென தலைமறைவாகிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தம்பதியை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் தம்பதி விருதுநகரில் பதுங்கி இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் நகை மற்றும் பணத்திற்காக மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. அதோடு அவருடைய உடலை துண்டு துண்டாக வெட்டி அதனை சாக்குப்பையில் வைத்து கட்டி அடையாற்றில் வீசியதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.