அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறுவது தான் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஜோக். அவர்கள் மீது மக்களும் அரசு அதிகாரிகளும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இது கூட திமுக அரசுக்கு தெரியவில்லை. திமுகவுக்கு கொஞ்சம் கூட கருணையே கிடையாது. அவர்களின் குடும்பம் மட்டும்தான் வளர்ச்சி அடைகிறது. இவர்களின் வாக்கு வங்கிளால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. சினிமா துறையில் இருந்து வந்த உதயநிதி ஸ்டாலின் யாரையும் தாக்குவதற்காக சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று வேடிக்கையாக கூறுகிறார்.

அவர்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு படம் கூட வெளியாவது கிடையாது என்பதை பொதுமக்கள் நன்றாக அறிவார்கள். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாற்றத்தை கண்டிப்பாக கொண்டு வருவார். வேங்கை வயலில் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தது யார் என்பதை இதுவரை திமுக அரசு கண்டுபிடிக்காததோடு கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சியாளர்கள் மக்களை மிகவும் தரக்குறைவாக நடத்தும் நிலையில் கண்டிப்பாக மக்கள் அவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள்.

தமிழ்நாட்டில் மன்னராட்சியை ஒழித்த போதிலும் இதுவரை கலைஞர் குடும்ப ஆட்சியை ஒழிக்கவில்லை. சனாதனம் பேசுபவர்கள் குடும்ப அரசியலை பேசுவது கிடையாது. அவர்கள் வீட்டிலேயே பூஜையை செய்துவிட்டு எப்படி சனாதனத்தை பற்றி பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. தமிழ்நாட்டில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. அதிமுக ஆட்சியில் மின்கட்டணத்தை உயர்த்தாத நிலையில் திமுக ஆட்சியில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கண்டிப்பாக மக்கள் இதற்கெல்லாம் பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.