ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியுடன் மோதிய போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெறவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அதோடு பாக். கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட 5 வீரர்கள் நாடு திரும்பாமல் லண்டனில் விடுமுறையை கழிக்க இருப்பதாக ஒரு தகவலும் வெளிவந்த நிலையில் பாக். அணியை முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆதிக் உஜ் ஜமன் அந்த அணியை கடுமையாக விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு சென்றது போல் தெரியவில்லை. அதற்கு பதில் அவர்கள் மனைவி மற்றும் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சென்றுள்ளார்கள். 60 அறையை முன்பதிவு செய்துள்ளதாக வெளியான தகவல் கேட்கவே நகைச்சுவையாக இருக்கிறது. இது போன்ற பெரிய போட்டிகளில் விளையாடச் செல்லும்போது குடும்பத்தினரை வீரர்களுடன் செல்ல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதிக்க கூடாது.

பாக். கிரிக்கெட் வீரர்கள் மனைவியுடன் வெளியே ஒன்றாக சுற்றுவது மற்றும் ஹோட்டலில் சென்று உணவு சாப்பிடுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு 2 வாரங்களுக்கு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியாதா. மேலும் இதற்காகவா உங்களுக்கு ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று பேசியுள்ளார்.