சென்னை குன்றத்தூர் அருகே உள்ள பூந்தண்டலம் பகுதியில், மகேஷ் (27) என்ற ஆட்டோ ஓட்டுநர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

​ஆட்டோ ஓட்டுநரான மகேஷ், தனது நண்பர்களான ஹரிகிருஷ்ணன் (27), வெங்கடேசன் (21) மற்றும் லலித்குமார் (21) ஆகிய மூவருடன் சேர்ந்து பூந்தண்டலம் பகுதியில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர்களிடையே ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாகத் திடீரென காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

​இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அந்த 3 நண்பர்களும், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மகேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும், அவர் நிலைகுலைந்து கீழே விழுந்ததும், கொடூரமாகத் அவரது தலையில் பெரிய கல்லைத் தூக்கிப் போட்டு சம்பவ இடத்திலேயே அவரைப் படுகொலை செய்துள்ளனர்.

​இதில் படுகாயமடைந்த மகேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த குன்றத்தூர் காவல் துறையினர், மகேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையைச் செய்துவிட்டு தப்பி ஓட முயன்ற ஹரிகிருஷ்ணன், வெங்கடேசன் மற்றும் லலித்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.