தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1.14 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1.16 கோடி பேர் இருந்த நிலையில் இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது 1.14 கோடி பேர் திட்டத்தில் பயனாளிகளாக இருக்கிறார்கள். இந்த திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்கள் 3 மாதங்களில் இணைக்கப்படுவார்கள் என்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி கொடுத்தார். இந்த திட்டம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாதமும் பெண்களின் வங்கி கணக்கில் 15 ஆம் தேதி 1000 ரூபாய் பணம் வரவு வைக்கப்படுகிறது.

இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிதாக பலர் இணைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக எவ்வளவு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு புதிதாக எத்தனை பேர் திட்டத்தில் சேர்வதற்கு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களில் எத்தனை பேரை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழக அரசிடம் சட்ட ஆர்வலர் கேள்விகளாக கேட்டிருந்தார். ஆனால் இவை அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதால் இது தொடர்பாக பதிலளிக்க முடியாது என்று தமிழக அரசு கூறிவிட்டது. மேலும் இந்த கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் வழங்க தமிழக அரசு மறுத்துவிட்டது.