பழங்குடியினர், பட்டியலினத்தவர் என கூறி போலிச் சான்றிதழ்கள் பெறுவதை தடுக்க 8 வாரங்களில் விதிகளை வகுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சான்றிதழ்கள் பெற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
குறும்பர் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சான்றிதழ் வழங்கவும், விதிகளை வகுக்கவும் உத்தரவிட வேண்டும் எனவும் சொக்கலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்ரமணியம், குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்த போது, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அமல்படுத்தாதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதே சமயம் உச்சநீதிமன்றமும் இது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மாநில அளவில் ஜாதி சான்றிதழ் சரிபார்ப்பு குழுக்கள் அமைக்கவும், போலி சான்றிதழ் தொடர்பான புகார்கள் தொடர்பாக விசாரணைக்கு கண்காணிப்பு குழு அமைக்கவும் உத்தரவிட்டிருக்கிறது. பட்டியலினத்தவர், பழங்குடியினர் என பொய் காரணங்களை கூறி சான்றிதழ் பெறுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சாதி சான்றிதழ்கள் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சான்றிதழ் பெற வேண்டும் என்றும், அவர்களின் பெற்றோர்கள் அல்லது உடன் பிறந்தவர்களுக்கு அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் அதேபோல வழங்குவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர். போலிச் சான்றிதழை பெறுவதை தடுக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு இதுவரை சட்டம் இயற்றவில்லை.
சம்பந்தப்பட்ட சான்றிதழ்களை வழங்குகின்ற அதிகாரிகளுக்கு உரிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். போலிச் சான்றிதழ்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் விதிகளை உருவாக்கி 8 வாரங்களில் அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து சொக்கலிங்கம் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.