திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு மாணவிகளுக்கு காசோலைகளை வழங்கினார். அதன் பிறகு அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் பேசியதாவது, புதுமைப்பெண் திட்டத்தின் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என பலரும் கோரிக்கை விடுத்து வருவதால் அது தொடர்பாக முதல்வரிடம் தெரிவிக்கப்படும்.
நெல்லை மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாததால் திருநெல்வேலி மாவட்டத்தை தற்போது வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பரிந்துரைக்கப்படும். மேலும் தமிழக அரசு தற்போது விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகையாக ரூபாய் 20000 வழங்கியதில் அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கூறினார்.