பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 தவணைகளாக வருடந்தோறும் ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 12 தவணை தொகை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 13-வது தவணை தொகை கொடுக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் 13-வது தவணைத் தொகையை விவசாயிகள் பெற வேண்டும் என்றால் உடனடியாக வங்கி கணக்குடன் ஆதார் அட்டை என்னை இணைக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற்று வரும் 7,953 விவசாயிகள் ஆதார் அட்டை எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எனவே இவர்கள் உடனடியாக வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஒருவேளை இணைக்கா விடில் அவர்களது 13-வது தவணை தொகை கிடைக்காது. இல்லையெனில் அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் பூஜ்ஜியம் தொகையில் புதிய வங்கி கணக்கு தொடங்கி அதன் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம். தபால் அலுவலகங்களில் கணக்குகள் தொடங்கப்படும் போது 48 மணி நேரத்தில் ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்படும். எனவே விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று கூறியுள்ளார்.