மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலின் பங்கங்கா சதுக்கத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த பயங்கர சாலை விபத்து, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது பிரேக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த ஒரு பள்ளி பேருந்து, சிவப்பு சிக்னலில் நின்று கொண்டிருந்த 8 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில், ஜேபி மருத்துவமனையில் இன்டர்ன்ஷிப் செய்து வந்த BAMS பயிற்சி மருத்துவர் ஆயிஷா கான் (முல்லா காலனி) என்பவர் உயிரிழந்தார். மேலும், ஆறு பேர் காயமடைந்தனர், இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டிடி நகர் போலீசார் தெரிவித்தனர்.

விபத்துக்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, பேருந்து ஓட்டுநர் “விலகி செல்லுங்கள், விலகி செல்லுங்கள்” என்று கத்தியதும், விபத்தை தடுக்க முடியாமல் விட்டுவிட்டதும், சிசிடிவி வீடியோக்களில் தெளிவாக பதிவாகியுள்ளது. பான்பூர் கிராசிங்கில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது திடீரென பின்னால் இருந்து வேகமாக வந்த பேருந்து மோதியது. அதில், ஸ்கூட்டரில் இருந்த ஆயிஷா, நேரடியாக மோதல் ஏற்பட்டதால் பேருந்தின் முன்பகுதியில் சிக்கி சுமார் 50 அடி இழுத்துச் செல்லப்பட்டார். இறுதியில், அவரது ஸ்கூட்டர் தூக்கி எறியப்பட்ட போதிலும், அவர் பேருந்தின் முன்சக்கரத்துக்குள் சிக்கி உயிரிழந்தார்.

 

விபத்துக்குப் பிறகு, பேருந்து ஓட்டுநர் தப்பிச் சென்றதாக போலீசார் கூறினர். வாகனத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும், ஓட்டுநரை  கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் டிஐ சுதீர் அரஜாரியா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், பொதுவெளியில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.