சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடூரமாகத் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத் நிஷா என்பவர், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவரது 19 வயது மகன் தாம்பரத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் நிலையில், ஹயாத் நிஷா மட்டும் ஒரு வீட்டில் இளம் தம்பதியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு சிகப்பு நிற சூட்கேஸ் மீட்கப்பட்டது. அதனைத் திறந்து பார்த்த ஆக்ரா போலீசார், உள்ளே தலை இல்லாத பெண் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டு உறைந்து போயினர்.
உடனடியாக சென்னை ரயில்வே போலீசார் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டது ஹயாத் நிஷா என்பது தெரியவந்தது. சென்ட்ரல் ரயில் நிலையக் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒரு ஆணும் பெண்ணும் அந்த சூட்கேஸை ரயிலில் வைத்துவிட்டுச் செல்வது பதிவாகியிருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் பூங்கா ரயில் நிலையம் வழியாக மின்சார ரயிலில் கூடுவாஞ்சேரிக்குத் தப்பியோடியது அம்பலமானது.
போலீசார் கூடுவாஞ்சேரியில் உள்ள அந்த வீட்டை அடைந்து சோதனை செய்தபோது, அங்கு மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. வீடு முழுவதும் ரத்தக் கரைகள் படிந்திருந்த நிலையில், பிரியாணி தயாரிக்கும் பெரிய அண்டா ஒன்றில் ஹயாத் நிஷாவின் உடல் சதை பாகங்கள் காய்கறிகளுடன் சேர்த்து வைக்கப்பட்டு, அதன் மீது மைதா மாவு தடவப்பட்டிருந்தது. இதைக் கண்ட போலீசார், கொலையாளிகள் அந்தப் பெண்ணின் உடலைச் சமைத்திருக்கலாம் என்ற கோணத்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது தலைமறைவாகியுள்ள அந்த இளம் தம்பதியைச் செல்போன் சிக்னல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கூடுவாஞ்சேரி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், கொலையாளிகள் வீசியதாகக் கருதப்படும் பெண்ணின் தலையைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
