தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழ் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். இதனால் தற்போது வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதுதான் பேசும் பொருளாக மாறி உள்ளது. சிலர் பிரபாகரன் உயிருடன் இருக்கலாம் என்று கூறும்போது சிலர் அவர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள். அதன் பிறகு இலங்கை ராணுவம் பிரபாகரன் உயிருடன் இல்லை என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற முன்னாள் எம்.பியும், தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான சிவாஜிலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பேரணி உள்ளிட்ட பல நேரங்களில் பிரபாகரனின் உடலை டிஎன்ஏ ஆய்வு செய்து அது அவருடைய உடல் தானா என்று நிரூபிக்க முடியுமா என நான் கேள்வி எழுப்பியுள்ளேன். ஆனால் இதுவரை அதற்கு பதில் கிடைக்கவில்லை. மேலும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ. நெடுமாறன் சொன்ன தகவலை முற்றிலும் புறம் தள்ளிவிட முடியாது என்று கூறியுள்ளார்.