கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் தனியார் கல்லூரியில் அமைந்துள்ள கேண்டினில் தினந்தோறும் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உணவு அருந்துகிறார்கள். இங்கு 15-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் கேண்டினில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு கேண்டினில் இருந்து வெளியே ஓடினர்.

அதன் பிறகு வடமாநில தொழிலாளர்கள் கையில் உருட்டு கட்டை மற்றும் கம்பி போன்றவை களுடன் கல்லூரியில் வலம் வந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், கல்லூரி நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அண்மையில் வட மாநில தொழிலாளர்கள் திருப்பூரில் தமிழ் இளைஞர்களை விரட்டி அடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது வட மாநில தொழிலாளர்கள் கல்லூரி மாணவர்களை தாக்கியது மேலும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.