பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு கல்லூரியில் 19 யுனானி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது. இதே போல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 350 இடங்களில் காலியாக இருக்கிறது. இதன் மூலமாக இதுவரை 900-க்கும்  மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, சித்தா ஆகிய ஆயுஷ்படிப்புகளுக்கு ஐந்து அரசு கல்லூரிகள் அமைந்துள்ளது.

அதில் உள்ள 330 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் 26 தனியார் கல்லூரிகளில் 1,990 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசிற்கும் 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் உள்ளது. இந்நிலையில் நிகழாண்டில் அரசு ஒதுக்கீடு நிர்வாக ஒதுக்கீடு தனியார் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தியுள்ளது.

இந்த கலந்தாய்வில் 19 யுனானி இடங்கள் நிரப்பப்படவில்லை. இதேபோல் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 272 ஹோமியோபதி இடங்கள், 54 ஆயுர்வேத இடங்கள் மற்றும் 24 சித்தா இடங்கள் காலியாக உள்ளது. மேலும் அகில இந்திய ஒதுக்கீட்டிலும் 127 இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமாக உள்ள 521 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு மாணவர்கள் முன் வராத காரணத்தினால் 90 சதவீத இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.