பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஓராண்டு சிறை தண்டனை உறுதி என்று திமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருக்கிறார்.
முன்னதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை DMK files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பூதாகரமாக வெடித்து ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அண்ணாமலை அவதூறு பரப்புவதாகவும் திமுகவினர் இழப்பீடு கேட்டு வருகின்றனர். அந்தவகையில் ரூ.100 கோடி இழப்பீடு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்பி TRபாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியலுக்கு எதிராக MP டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய ஆர்.எஸ்.பாரதி, “திமுகவுக்கு பொய் வழக்கு போட்டு பழக்கமில்லை. அண்ணாமலைக்கு ஓராண்டு சிறை தண்டனை நிச்சயம் கிடைக்கும்” என்றார்.