இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி இருக்கும் பதான் படம் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடல் ஆபாசத்தின் உச்சம் என மிகப் பெரிய சர்ச்சைகள் கிளம்பியது. இப்பாடல் பல கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையில் பாஜகவினர் மற்றும் இந்து மத அமைப்பினர் இப்பாடலுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குஜராத் அகமதாபாத்திலுள்ள வஸ்திராபூரில் இயங்கும் தனியார் மாலில் பதான் திரைப்படத்தின் போஸ்டர்கள் இருந்துள்ளது. இதை அறிந்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் அங்கங்களில் ஒன்றாகிய பஜ்ரங் தள் அமைப்பினர் சில பேர், தனியார் மாலில் இருந்த பதான் பட போஸ்டரை கிழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அத்துடன் மாலின் வெளியே வந்து அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.