மகாராஷ்டிரா மாநிலம் பிம்பிரி-சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள ஸ்வீட் கடை அருகே நேற்று முன்தினம் காலை காய் விற்றுக் கொண்டிருந்த 26 வயதான கான் என்ற காய்கறி வியாபாரி மீது அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த மற்றொரு நபர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட வியாபாரியும், அந்த ஆட்டோ ஓட்டுநரும் ஒரே இடத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே வியாபாரம் செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. குறிப்பாக, தன் கடைக்கு அருகில் காய்கறிகளை விற்கக் கூடாது என்று முந்தைய நாளே அந்த ஆட்டோ டிரைவர் கானை மிரட்டியிருந்த நிலையில், அதைக் பொருட்படுத்தாமல் வழக்கம்போல் அவர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆட்டோ டிரைவர், கடந்த புதன்கிழமை காலை திடீரென அங்கு வந்து திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் கானை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்குப் போராடிய அந்த இளைஞரைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
🚨 Shocking CCTV from #PimpriChinchwad shows a 26-year-old #vegetablevendor allegedly attacked with a sharp weapon over a stall dispute. The accused slashed the victim’s neck and fled. #PimpriPolice have launched a manhunt. #Pune #Crime #CCTV #Breaking pic.twitter.com/MjAompxw2E
— Varad Bhatkhande | Journalist (@VaradBhatkhande) August 6, 2026
இந்த வெறிச்செயல் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி பொதுமக்களைப் பதைபதைக்க வைத்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வியாபாரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள பிம்பிரி காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள அந்த ஆட்டோ ஓட்டுநரைத் தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பகல் பொழுதில் நடந்த இந்த கொடூரத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
