ஜம்மு & காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணியளவில் பயணிகள்மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படும் இந்த புல்வெளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா டுடே வெளியாகிய செய்தியில், ஒரு பயங்கரவாதி துப்பாக்கியுடன் கையில் இருக்கும் புகைப்படம் முதன்முதலாக வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அடிப்படையிலான லஷ்கர்-எ-தய்பா இயக்கத்தின் உள்ளூர் கிளையான The Resistance Front பொறுப்பு ஏற்றுள்ளது. இந்நிலையில், பாதுகாப்புப் படைகள் தீவிரமாக வலைவீசி தாக்குதலாளிகளை தேடி வருகின்றன. தாக்குதல் நேரத்தில் அப்பகுதியில் இருந்தவர்கள், திடீரென வெடித்த துப்பாக்கிச் சத்தத்தில் பயணிகள் அலறி ஓடிய சூழலை சோகமுடன் விவரித்தனர். “ஒளிந்துகொள்ள இடம்கூட இல்லை,” என ஒரு சாட்சியாளர் கூறியுள்ளார். சம்பவ இடத்தில் கிடந்த உடல்கள், அழும் பெண்கள், உதவிக்கு ஓடிய உள்ளூர் மக்கள் ஆகிய காட்சிகள் உள்ளங்களை பதறவைத்தன.

இந்த கொடூர சம்பவத்தை கண்டித்த பிரதமர் நரேந்திர மோடி, தன் சவுதி அரேபியா பயணத்தை  உடனடியாக நாட்டிற்கு திரும்பினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்தை நடத்தியதுடன், பஹல்காமுக்கு சென்று நேரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, “இது மனிதநேயத்திற்கு எதிரான செயல்,” எனக் கூறினார். முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட பல தலைவர்களும் இந்த தாக்குதலைக் கடுமையாக கண்டித்துள்ளனர். நாட்டின் முழுக்கவும் ஏற்பட்டுள்ள வலி, பாதுகாப்பு மற்றும் எதிர்வினை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது. தாக்குதலாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.