நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதரவா?…. இன்னும் ஓராண்டு இருக்கு…. என்னுடைய அரசியல் இதுதான்…கமல் சொன்ன பதில்..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது, இப்போது அது பற்றி தெரிவிக்க இயலாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்..

ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

இதனிடையே தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு கேட்டிருந்தார். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாக குழு – செயற்குழு கூட்டம் இன்று காலை 11:30 மணியளவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதசார்பற்ற போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், எனது நண்பரும், பகுத்தறிவு பகலவன் பெரியாரின் பேரருமான திரு ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி ஏக மனதாக முடிவு எடுத்துள்ளோம்.

அவரது வெற்றிக்காக நானும், எனது கட்சியினரும் வேண்டிய உதவிகளை செய்வோம் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். 18 வயதை பூர்த்தி அடைந்த ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் நாளில் திரு ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு வாக்களித்து அவரை பெறுவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக திரு ஆ.அருணாச்சலம் எம்.ஏ, பி.எல் அவர்களை நியமிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முடிவு என்பது ஒரு அவசர நிலை, இது தமிழகத்திற்கு, தமிழ்நாட்டிற்கு பயன் உள்ளதாக அமைய வேண்டும். எதிர்வாத சக்திகளுக்கு இது கைகூடி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்திருக்கக்கூடிய முடிவு. இது இப்போதைய என் முடிவு, இன்னும் ஒரு வருடம் கழித்து எடுக்க வேண்டிய முடிவை அவசரப்படுத்தி எங்களிடமிருந்து பதிலைப் பெற முடியாது. கண்டிப்பாக ஒத்துழைப்போம். நாங்கள் வெற்றி பெற உங்களுக்கு எல்லா உதவியும் செய்வோம். இது என்னுடைய மனதில் இருந்து வருவது தான் என்னுடைய அரசியல், இன்னும் ஒரு வருடத்திற்கு முன் எடுக்க வேண்டிய முடிவை நிர்பந்தித்து ஒரு பிரஸ்மீட் முடிவில் எடுக்க முடியாது. இது தயக்கம் இல்லை, இது பரந்த ஒரு நோக்கம். ஏனென்றால் இன்னும் 12 மாதங்கள் இருக்கு.

தமிழ்நாட்டிற்கும், தேசத்திற்கும். இதே மாதிரி தான் ஓடும் என்று சொல்ல முடியாது. காலமும், பேச்சும், அரசியலும் மாறிக்கொண்டே இருக்கிறது. உங்களுக்கு தெரியாதது இல்லை, ஆனால் இந்த நேரத்தில் அனைவருமே சகோதரர்கள் தான், எந்த கட்சியில் இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் என்னுடைய சகோதரர்கள் தான். நாளைக்கு தேசத்திற்கு என்று வரும்போது அந்த கோடையும் அழிக்க வேண்டியது வரும். ஒரு போர் மூளும் போது கட்சிகளை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க முடியாது. எனக்கு பிடிக்காத கட்சி அவங்களோட ஐடியாலஜி பிடிக்கவில்லை என்றால் தேசத்திற்காக நாம் அனைவரும் ஒரே மேடையில் அமர வேண்டும். அதுதான் என்னுடைய அரசியல் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply