ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு கொடுப்பதாக தற்போது அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்துள்ளதால் வருகிற தேர்தலில் திமுக கூட்டணிக்குள் மக்கள் நீதி மய்யம் கட்சியும் வந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் மக்கள் நீதி மய்யம் கட்சி எதற்காக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளது என்பது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை சினேகன் வாசித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவின் பன்மைத்துவம், இறையாண்மை தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகிறது. மொத்த தேசத்தையும் ஒற்றை பண்பாட்டிற்குள் கொண்டு வர துடிக்கிறார்கள். மக்களின் உணவு, உடை, மொழி என ஒவ்வொரு விஷயத்திலும் ஊடுருவ முயற்சிக்கிறார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுக்கின்றனர். கொல்லைப்புறமாக நுழைந்து மாநில உரிமைகளில் தலையிடுவது, இடையூறு செய்வது தொடர்கிறது. தமிழ்நாடு சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி மண் என்பதை இந்தியா முழுவதும் ஒலிக்கச் செய்வோம். இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.