தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். குறிப்பாக விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் பிறகு திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலையடிவாரத்தின் கீழ் உள்ள வீடுகளின் மீது நேற்று முன்தினம் இரவும் பெரிய பாறை ஒன்று உருண்டு விழுந்தது. இதில் 3 வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில் இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் இன்று காலை முதல் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3 சிறுமிகள் சிக்கி கொண்ட நிலையில் இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு நடைபெற்று வரும் மீட்பு பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தற்போது நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர் இரவு நேரத்தில் கூட அமைச்சர் வேலுவுடன் சென்று மீட்பு பணிகள் நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதாக கூறினார். மேலும் நாளை இந்த நிவாரணம் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளார்.