மதுரை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பணிகள் எதற்காக மந்தமாக நடைபெறுகிறது என்று அதிகாரிகளை கண்டித்தார். பின்னர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறிய நிலையில், முல்லை நகருக்கு மட்டும் அந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை எல்லா பகுதிகளுக்கும் தான் சொல்லியுள்ளது. அப்படி நீர் நிலைகளில் உள்ள பகுதிகளை எல்லாம் அகற்ற வேண்டும் என்று கூறினால் முதலில் உயர்நீதிமன்றத்தை தான் அகற்றனும்.
அதுவும் நீர்நிலைப்பகுதிகளில் தான் இருக்கிறது. 20 நாட்களாக சாக்கடை நிரம்பி வழியும் நிலையில் அதனை அமைச்சர்கள் வந்து பார்க்க கூடாதா.? முன்னதாக முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்தி மதுரையில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களை சொன்ன நிலையில் அது தொடர்பாக எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இந்த அரசாங்கம் வெறும் பெயரளவுக்கு தான் செயல்படுகிறது. கூட்டணி பலம் இருக்கிறது. கூட்டணி எவ்வளவு வலுவாக இருந்தாலும் கண்டிப்பாக இந்த அரசின் மீது உள்ள வெறுப்புணர்ச்சி காரணமாக இந்த கூட்டணியில் இணையும் அனைத்து கட்சிகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவார்கள். மேலும் இது தான் நடக்கப்போகிறது என்று கூறினார்.