கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த ஆம்புலன்ஸில் அவருடைய கணவர் சந்திரன், உறவினர் பிரதீப், மற்றும் 2 செவிலியர்கள் உடனிருந்தனர்.

இந்த ஆம்புலன்ஸ் வேகமாக சென்ற நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி தீ பிடித்தது. உடனடியாக ஓட்டுநர், செவிலியர்கள் உட்பட 4 பேர் கீழே இறங்கினர். ஆனால் உடல்நிலை சரியில்லாத சுலோச்சனாவை ஆம்புலன்ஸில் இருந்து கீழே இறக்க முடியவில்லை. இதனால் அவர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து சுலோச்சோனாவின் உடல் மீட்கபட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.