தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. அப்போது, அந்த உரையிலிருந்த திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர், அமைதி பூங்கா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்தார். மேலும் சில வரிகளை தானாகவே சேர்த்துக்கொண்டார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆளுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் போதே எழுந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சிக்கு முற்றிலும் முரணான அடிப்படையில் ஆளுநர் நடந்துகொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து ஆளுநர் கோபத்துடன் தேசியகீதம் இசைப்பதற்குள் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.

இதற்கிடையில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறிய சம்பவம் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாகலாந்தில் இருந்து எப்படி ஓடி வந்தீர்களோ, அதே போல தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஓட ஓட விரட்டுவார்கள் எனக் கூறியுள்ளார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையாகி உள்ளது.