அரசு தயாரித்த உரை ஆளுநர் ரவி முறையாக படிக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையை தமிழில் தொடங்கி ஆங்கிலத்தில் உரையாற்றினார். ஆனால் ஆளுநர் ரவி அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் சிலவற்றை நீக்கி வாசித்தார். அதன்படி திராவிட மாடல் வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு அரசு நடைபெறுகிறது என்ற வாசகத்தையும் ஆளுநர் படிக்கவில்லை. தமிழ்நாடு அரசு என்ற இடங்களில் எல்லாம் இந்த அரசு என்று ஆளுநர் படித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற கலைஞரின் மேற்கோளையும் ஆளுநர் புறக்கணித்தார்.

திராவிட மாடல் என்ற வார்த்தையை உச்சரிக்காமல் புறக்கணித்தார். திராவிட மாடல் மட்டுமின்றி பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் பெயர்களையும் படிக்காமல் புறக்கணித்தார். அதேபோல சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண் உரிமை, மத நல்லிணக்கம், பார் போற்றும் திராவிட மாடல் ஆட்சியை திமுக அரசு வழங்கி வருகிறது ஆகிய வார்த்தைகளையும் புறக்கணித்தார்.

இதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், தமிழக அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. உரையில் இடம்பெறாமல் ஆளுநர் சொந்தமாக சேர்த்துக் கொண்டவை அவை குறிப்பில் இடம் பெறாது. அரசின் கொள்கை உரையை ஆளுநர் ஆர்.என் ரவி முழுமையாக படிக்காதது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்தார். அரசு தயாரித்து கொடுத்த உரையை முறையாக படிக்காத ஆளுநருக்கு பேரவையிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து பேசி வந்தநிலையில் பாதியிலேயே ஆளுநர் ரவி வெளியேறினார்..