வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்த நிலையில், இது தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னர் வளைகுடா பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் பல இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த மழையின் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வருகிற 4-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், பிப்ரவரி 5-ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.
அதன் பிறகு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று நாளை குமரி கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் இன்று மற்றும் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.