சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் மழைக்காலங்களில் நீரோடைகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால் வனத்துறையினர் பக்தர்களை கோவிலுக்கு செல்ல அனுமதிப்பதில்லை. சமீபத்தில் தைப்பூசம் திருநாளை முன்னிட்டு பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பௌர்ணமியை முன்னிட்டு பிப்ரவரி 3ஆம் தேதி முதல் ஆறாம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த நாட்களில் காலை ஏழு மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று மற்றும் நாளை பக்தர்கள் மலையேறி செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மலை அடிவாரத்திற்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.