தமிழகத்தில் மது கடைகள் மூலமாக அரசுக்கு கூடுதல் வருவாய் வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 முதல் 20 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக புகார்கள் என்பது தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறையை தடுப்பதற்காக பில்லிங் முறை மற்றும் qr code மூலம் பணம் செலுத்தும் முறை போன்றவைகளை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் அச்சிடப்பட்ட பில் வழங்கும் நடைமுறை இன்னும் 2 வாரங்களில் அமல்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளிவந்தது. ஏற்கனவே இந்த முறை ராமநாதபுரம் மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் சோதனையில் இருக்கிறது.
இந்நிலையில் இன்று முதல் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளின் விற்பனையாளர்களுக்கு பில்லிங் செய்வது தொடர்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 84 டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்களுக்கு இன்று முதல் ரசீது போட்டு மதுபானங்களுக்கு வழங்கும் நடைமுறை குறித்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த திட்டம் விரைவில் தமிழக முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.