சென்னை வட பழநியிலுள்ள சினிமா தியேட்டரில் ஒருவர் ரூ.500 நோட்டை கொடுத்து படம் பார்க்க டிக்கெட் கேட்டு உள்ளார். ரூ.500 நோட்டை வாங்கிய தியேட்டர் ஊழியர், போலியான ரூபாய் நோட்டு என்பதை அறிந்து அந்நபரை மடக்கி பிடித்து விருகம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் விசாரணையில், பிடிபட்ட நபர் துாத்துக்குடியை சேர்ந்த அய்யப்பராஜ்(32) என்பதும், விருகம்பாக்கம் அருணாச்சலம் சாலையில் வாடகை வீட்டில் தங்கி சினிமா துறையில் பணியாற்றுவதும் தெரியவந்தது.

அதோடு அவர் சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் “டம்மி” ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தியதும் தெரியவந்தது. சூட்டிங்கில் பயன்படுத்துவதற்காக சினிமா துறையை சேர்ந்த நண்பர் ஒருவர் ரூ.7,000 மதிப்பிலான டம்மி நோட்டுகளை கொடுத்துள்ளார். அதில் ரூ.6,000 வீட்டு உரிமையாளரிடம் வாடகையாக கொடுத்து ஏமாற்றியுள்ளார் அய்யப்பராஜ். மீதம் உள்ள பணத்திற்கு படம் பார்க்க வந்தபோது காவல்துறையினரிடம் சிக்கினார். அவரிடமிருந்து போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.