இயக்குனர் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த 1-ம் தேதி “லாபடா லேடீஸ்” என்ற திரைப்படம் இந்தியில் வெளியானது. இந்த படத்தை நடிகர் அமீர்கான் தயாரித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் நிதான்ஷி கோயல், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரதிபா ரந்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாலின சமத்துவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் “லாபடா லேடீஸ்” திரைப்படம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று திரையிடப்பட உள்ளது. அதாவது சுப்ரீம் கோர்ட்டின் 75 ஆண்டு விழாவை ஒட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சுப்ரீம் கோர்ட்டின் நிர்வாக கட்டிட வளாகத்தின் பி பிளாக்கில் வைத்து இந்த திரைப்படம் இன்று மாலை 4:15 முதல் 6:20 மணிவரை திரையிடப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதோடு இந்த படத்தின் நடிகர் அமீர்கான் மற்றும் இயக்குனர் கிரண் ராவ் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். மேலும் இதில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கலந்து கொள்ள இருக்கிறார்.